பிக்பாஸ் – 4 : நாள் - 2 (06.10.20)


1 வது நாள் தொடர்ச்சி

நேத்து விட்டுப்போன 2 பேரு பில்டர் பாலாஜியும், அனிதாவும்...

உடம்பு முறுக்கேற முட்டைகள முழுங்குற பாலாஜிய நிஷா கலாச்சுட்டாங்க போல... பையன் மூட் அவுட் ஆகிட்டான். அதுனால நிஷாவுக்கு ஒரு ஹார்ட் பிரேக் குடுத்தான். அதட்டி ஆர்டர் போடுறதால ரேகாம்மாவுக்கு ஒரு இதய உடைப்பு. இத ரேகா மறுத்தாலும் அத கேக்குறதுக்கு அங்க ஆளு இல்ல. சுரேஷுக்கும், ரியோவுக்கும் ஹார்ட்டு குத்துனான்.

அனிதாவோ, ஒன்ணு மண்ணா புழங்கலன்னு புகார் சொல்லி ஜித்தனுக்கும், சம்யுக்தாவுக்கும் ஹார்ட் பிரேக் குடுத்தாங்க. வாண்டடா எல்லாரையும் வண்டி ஏத்தி விடுறதால வேல்முருகனுக்கு ஹார்ட்டு. நிஷா அனிதாவோட அம்மா மாதிரி இருக்காங்களாம்....கலருல. சோ நிஷா மாதிரி தன்னம்பிக்கைய அவங்கம்மவுக்கு சொல்லிக்குடுக்கனுமாம். அதனால நிஷாவுக்கு ஹார்ட்டு அண்டு ஹக்கு. முடிச்சுட்டு “சாரி நான் கொஞ்சம் எமோஷனாகிட்டேன்”னு மூக்க சிந்திட்டு போயிருச்சு.

(அனிதா அவங்கம்மா பேரன்ட்ஸ் மீடிங்குக்கு வந்ததில்லன்னு அழுகுது...எங்கம்மால்லாம் வந்திருந்தா நான் நாள் பூராம் அழுதிருப்பேன். என்ன பொண்ணோ போ....!)

வெளிய வந்து வட்ட மேசை மாநாடு ஒன்ணு போட்டானுங்க அதுல ஆரி, ஷிவானி, சம்யுக்தா, பில்டர் பாலாஜி இருந்தானுங்க. சட்டுனு ஆரி ஷிவானியப் பாத்து “ஆமா நீ எதுக்கு இங்க வந்த?”ன்னு கேக்க, ஷிவானி “அதாண்டா நானும் யோசிக்கிறேன். நான் ஏன் இங்க வந்தேன்னு?ன்ற மாதிரி பக்க பக்கன்னு முழிக்க...சம்யுக்தா எடுத்து குடுத்துச்சு.

“நானே ஐ டெக்ஸ் பிராண்ட் மை டப்பாவ வீட்ல விட்டுட்டு வந்துட்டேன்னு உக்காந்திருக்கேன் எங்கிட்ட வந்து இவனுங்க இது உன் கேம் பிளானான்னு கேக்குறானுங்க கெரகம் பிடிச்சவனுங்க. பாராட்டுக்காகத்தான இந்த பாடாவதி வீட்டுக்கு வந்தேன் அத யாரச்சும் புரிஞ்சுக்குறானுங்களா? அதுக்குதான இவ்வளவும்”னு ஷிவானி ஷிஃபான் பாவடையில கண்ண தொடைக்க. “அதேதான் அந்த பாரட்ட மட்டும் போக்கஸ் பண்ணி பொறுப்பா நடந்துக்க”ன்னு ஆரி ஆத்தி முடிச்சாப்ல. “ஆனாலும் ஷிவானிக்கு இவ்வளவு ஹார்ட் பிரேக் குடுத்தது எனக்கு வருத்தங்கள்பா”ன்னுஇந்த கடுகளவு கேப்ப பில்டர் பாலாஜி ஃபில்லப் பண்ணாப்ல.

“வாயேன் அப்டியே விக்கு விக்குன்னு வாக்கிங் போலாம்”னு ஷிவானியோட வாக்கிங்க் போனான் பில்டர் பாலாஜி

பில்டர் : ஷிவானி , ஷூட்டிங் முடிச்சதும் வீட்டுக்குதான் போவியா ?

ஷிவானி : என் ஷூட்டிங்கே வீட்லதான !

பில்டர் : அப்ப வீட்ல ஷூட்டிங் முடிச்சிட்டு எங்க போவ ?

ஷிவானி : வெளிய

பில்டர் : வெளியன்னா ?

ஷிவானி : ம்ம்ம்....டாய்லெட்டுக்கு....! (Mind Voice : விஜய் தேவரகொண்டா மாதிரி இருக்கானேன்னு கூட வந்தா இவன் வெளங்காதவனா இருக்கானே)

பில்டர் : அப்ப சரி...! மத்தபடி நீ எதுக்கும் ஃபீல் பண்ணாத....எனக்கு சங்கடமா இருக்கு...இந்த காரணத்துனால மத்தியானம் முட்டையில பெப்பர் கூட போட மறந்துட்டேன்னா பாத்துக்கோ //

இப்பிடி பலவாறா பலமான நங்கூரத்த பில்டர் பாலாஜி பாய்ச்ச ஆரம்பிச்சுட்டாப்ல....ஷிவானி சிக்குவாங்களான்றத சில நாட்களுக்குப் பிறகு தெரிஞ்சுக்கலாம்.

நள்ளிரவுல அனிதா கேபியையும், சம்முவையும் (சம்யுக்தா பேரு ரொம்ப லெங்த்தா இருக்கு) வச்சுக்கிட்டு சுரேஷ கூப்ட்டு அவர கலாச்சு நியூஸ் வாசிக்க.....அத பாராட்டிக்கிட்டே சுரேஷ். “பரவாயில்ல பல நியூஸ் ரீடர்கள் எச்சி தெறிச்சுருவாங்க”ன்னு தெளிச்சு விட....”தெறிச்சா தள்ளி உக்காரு”ன்னு கவுண்டர் குடுத்தாலும் அனிதா ஆங்ரி பேர்டா மாறுனத அவங்களாலயே தடுக்க முடியல. இத வேல்முருகன் கிட்ட “தப்பா பேசிட்டான் டப்பா தலையன்”னு முறையிட்டாங்க.

கட் பண்ணா.....2ம் நாள் காலை !

விடிஞ்சும் விடியாமையும்....முழிச்சுப் பாத்தா ஷிவானியும், பில்டரும் வாக்கிங்க்ல இருக்கானுங்க....இவனுங்க நைட்டுல இருந்தே வாக்கிங்தான் போலயே....! காலார நடக்குறதுல கண்ணம்மாவ மிஞ்சிருவானுங்க.

ச்சும்மா கிழி பாட்டு அலாரம். ஆக்சுவலா 2 நாளா இந்த திருவாத்தானுங்க எந்திரிச்சப்பறந்தான் அலாரம் அடிக்குது....இனிமே பிக்பாஸுக்குதான் அலாரம் வைக்கனுமாட்ருக்கு.

நல்லா கவனிச்சு பாத்ததுல அனிதா, ஷிவானி, கேபி, ஆஜித்னு ஒரு நாலஞ்சு பேரத் தவிர மத்த ஆளுகளெல்லாம் கைய, கால ஆட்டி அட்மாஸ்பியர அட்ஜஸ்ட் பண்ற கோஷ்டிதான். ஷிவானி மட்டும் என்னமோ உங்களில் யார் அடுத்த  கனகா ஆடிஷனுக்கு வந்த மாதிரி தனி ஆளா தவ்விக்கிட்டு இருந்தாங்க. அலாரத்துக்கு ஆடும்போது மட்டும் தலையில ஒரு முயல் காது பேண்ட எதுக்கு மாட்டிக்கிறாங்கன்னு எக்மோர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரதான் விசாரிக்க சொல்லனும்.

டக்குன்னு பாட்ட நிறுத்துன பிக்பாஸ் “இந்த வாரம் நாமினேஷன்லாம் இல்ல...எல்லாம் பொய்யி”ன்னு சொன்னதும் கூச்சல் போட்டுட்டு கலைஞ்சானுங்க.

எச்சித்தெறி மேட்டர்....! இருந்திருந்தாப்ல அனிதா சுரேஷ பாத்து “ஆனாலும் நியூஸ் ரீடர்கள்லாம் எச்சி தெறிப்பாங்கன்னு நீ சொல்லியிருக்கக்கூடாது”ன்னு சொன்னதும், சம்பந்தமில்லாம சைக்கோ வில்லன் மாதிரி அனிதா கையப் பிடிச்சுக்கிட்டு மூஞ்சிய பக்கத்துல கொண்டுவந்து “என் கண்ணுல பொய் தெரியுதா?”ன்னு சுரேஷ் கேக்க....”பொய் இல்ல சனியனே ரேகாகிட்ட திருடி நீ போட்ட மைதான் தெரியுது....கைய விடுன்”னு தட்டி விட்டுடுச்சு அனிதா.

“சார் நீங்க சொன்னது பிடிக்கல”ன்னு அனிதா சொல்ல, “நீ பிடிக்கலன்னு சொன்னது எனக்கு பிடிக்கல”ன்னு சுரேஷ் சொல்ல....”குறும்படம் பாப்போம்”னு அனிதா சொல்ல, “பெரும்படமே பாக்கலாம்”னு சுரேஷ் சொல்ல......

இப்டியே காச்...மூச்னு கதறிட்டு இருந்தானுங்க. அப்றம் ரேகா மத்தியஸ்தம் பண்ணி ஆளுக்கொரு பக்கமா அனுப்பிவிட, அங்க இருந்து கிளம்புன சுரேஷ் நேரா கக்கூஸ் வந்து கேமராவப்பாத்து “பாராட்டி பேசுன என்னயவே பாவமன்னிப்பு கேக்க வைக்க பிளான் பண்றானுங்க...முன் ஜாக்கிரதை ரொம்ப முக்கியம் பிகிலே”ன்னு முக்கிட்டு போனாரு. வெளிய வந்து பசங்ககிட்ட வில்லுப்பாட்டு பாடுனாப்ல சுரேஷ். எதுவுமே புரியலன்னாலும் ஃபுல் ஸ்விங்க்ல தலையாட்டுனானுங்க எல்லாரும்.

கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் சனம் தலைமையில சுரேஷும், அனிதாவும் கையக்குடுத்து சமாதானம் சொல்லிக்கிட்டாங்க. ஆக தவறான புரிதல்ல சண்டைக்கு சைடு இண்டிக்கேட்டர் போட்டு சலம்பல் பண்ணதால இந்த மேட்டர்ல அனிதாவோட சைடு கொஞ்சம் வீக்கா இருக்கு.

ரேகாம்மா கேமராவ க்ளோசப்ல பாத்து பாட்டுப் பாடுன கொடூர சம்பவம் நடந்துச்சு. தமிழ்நாட்டுல நாளைக்கு வேப்பிலைக்கு தாராள தட்டுப்பாடு ஏற்படலாம்....ஜாக்கிரதை. குழந்தைகளும் பாக்குற நிகழ்ச்சியா இருக்குறதால இந்த மாதிரி சம்பவங்களை தவிர்க்கலாம்.

அடுத்த அறிவிப்பு வந்துச்சு....! அதாவது தகுதியான 8 பேர செலெக்ட் பண்ணனுமாம்....தகுதியில்லன்னு செலெக்ட் ஆன 8 பேருலதான் அடுத்தவார நாமினேஷனுக்கு ஆளெடுக்கனுமாம்.

ஆடியன்ஸ் : சரி....எப்டி தகுதியானவங்கள கண்டுபிடிக்கிறது ?

பிக்பாஸ் : அதான் தகுதியில்லைன்னு ஒரு 8 பேரு இருப்பங்கள்ல அவங்கள தவிர இருக்குற மீதி இருக்குற 8 பேரு தகுதியானவங்கதான !

ஆடியன்ஸ் : சரி...அப்ப தகுதியில்லாதவங்கள எப்பிடி கண்டுபிடிக்க ?

பிக்பாஸ் : அதான் தகுதியான 8 பேரு....

ஆடியன்ஸ் : டேய்.......

பிக்பாஸ் : அத கண்டுபிடிக்கத்தான் இருக்கே கம்ப்ளீட்லி நியூ மெத்தட் “கடந்து வந்த பாதை....!” யாரு கடந்தது நல்லா இல்லையோ அவங்க அன்செலெக்டட்....மீதி ஆளுங்க செலெக்டட் !

கேமராவ கைல எடுத்துட்டா கண்ணுல தண்ணி பாக்காம வைக்கிறதில்லன்ற பரம்பரைய சேர்ந்தவரு போல பிக்பாஸு.

கன்ணீர் மழையில் நனையத் தயாரான்னு ஆரம்பிச்சானுங்க...

வேல்முருகன், தன்னோட கன்ணீர் கதைய காத்துல கசியவிட, அதவிட அழுகையா என்ன கதை சொல்றதுன்ற பதட்டத்துலயே பல பேரு அழுக ஆரம்பிச்சுட்டானுங்க.....! ஷிவானியெல்லாம் “ பேசாம...நைட்டாச்சுன்னா எங்க ஏரியா இருட்டாகிடும்னு சொல்லி அழுதுறலாமா?”ன்னு யோசிக்க ஆரம்பிச்சுடுச்சு போல. ஒரு வழியா வேல்முருகன் முடிச்சு விட்டாப்ல.

அடுத்தது சனம். கடைசி பெஞ்ச் ஸ்டூடெண்ட எழுப்பி “முன்னாடி வந்து நின்னு 30ம் வாய்ப்பாடு சொல்லு”ன்னு சொன்னா நடந்து வருவானே ஒரு நடை, அந்த நடையில வந்தாங்க.... ! வந்ததும் “நான் நடிகைன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்”னு ஆரம்பிச்சாங்க....நார்மல் நேரம்னா எல்லாரும் கோரசா “தெரியாது”ன்னு சொல்லியிருப்பானுங்க....இதுதான் நியூ நார்மல் ஆச்சே...அதுனால விட்டுட்டானுங்க. ரொம்ப நேரமா அன்பு, அம்மா, அப்பா, அம்மா, அன்பு, அப்பா, அன்பு அப்பா, அம்மான்னு பெனாத்திட்டு கிளம்பிட்டாங்க.

நெக்ஸ்டு நிஷா...! டாஸ்க்கோட கான்செப்ட்டயே மொத்தமா மாத்தி....பிக்பாஸ் மூஞ்சில விபூதி அடிச்சு விட்டாங்க. அவங்க வாழ்க்கை கதைய ரொம்ப காமெடியா, சுவாரஸ்யமா சொல்லி முடிச்சாங்க. அப்றம் சாஸ்திரத்துக்கு ஒரு சம்பவத்த சொல்லி அழுது....மத்தவங்க ஆறுதல் சொல்லி....ஒரு வழியா இந்த எபிசோட் முடிஞ்சது....!


 

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)