பிக்பாஸ் 3 : நாள் 40 (02.08.19)
பிக்பாஸ் 3நாள் 40 (02.08.19)
“தர லோக்கல்” பாட்டு.....பசங்க எல்லாம் மொத்தமா இறங்கி குத்துனானுங்க. பொண்ணுங்க யாரும் இன்னைக்கு ஆட வரல. லாஸ் கூட ப்யூஸ் போனா மாதிரிதான் இருந்தாங்க. சல்பேட்டா எந்திரிச்சதும் லாஸையும் கவினையும் தேடுச்சு. ரெண்டு பேரும் தனித்தனியா இருக்குறதப் பாத்தப்பறந்தான் அதுக்கு நிம்மதியா விடிஞ்சது. “சரி டைம் இருக்கு ஒரு நாலு தோசைய சாப்டப்பறம் நைசா ஆரம்பிக்கலாம்”னு முடிவு பண்ணிட்டு அமைதியா ஆகிடுச்சு.
அபி மட்டும் இவனுங்க கூட ஆடிட்டு இருந்தாங்க. அபிக்கு முகின விட்டு ஒரு செகண்ட் கூட அங்கிட்டும் இங்கிட்டும் போக மனசே இல்ல. அன்பு கெடைக்கலேன்னு சொன்னாலும் சொன்னான் முகின். அபி சும்மா அன்பு ஆக்சிஜன அரை நொடிக்கு ஒரு தடவ அவனுக்கு ஏத்திட்டே இருக்காங்க. எங்க இருந்தாலும் அபி பார்வை முகின் மேலதான்.சொல்லப்போனா அங்க ஒரு லிவிங் டூ கெதெர்லதான் இருக்காங்க போல ரெண்டு பேரும். பிக்பாஸ் வீட்டுக்கு யாரும் டொனேஷன் கேட்டு வந்தாலும் அபிகிட்ட “வீட்டுக்காரர் முகின் இருந்தா வர சொல்லுமா”ன்னு சொல்ற அளவுக்கு இருக்காய்ங்க.
நின்னுகிட்டு போற பஸ்ல கை பிடிக்கிற கம்பி மாதிரி அபிக்கு முகின். பொண்ணுங்கள்ல யாருக்கு என்ன பிரச்சனையா இருந்தாலும் அபிய அழுக வச்சு வேடிக்கை பாத்து ஆறுதலடையுறாங்க. அதுனால அபிக்கு பொண்ணுங்க சைடு போகவே பயம். ஆண்கள் ஆல்ரெடி எங்கேஜ்டா இருக்கானுங்க. கிடச்ச ஒரே ஆளு, ஒரே ஆறுதல் முகின் தான். ஆனா அங்க இருக்குற வெளங்காவெட்டிங்க எதயாச்சும் சொல்லி முகின முழு சன்னியாசியா மாத்திட்டானுங்கன்னா என்ன பண்றதுன்னு அபிக்கு பயம். அவனுங்க காத்து படாம முகின காப்பாத்துறதே அபிக்கு பெரிய பொழப்பாப் போச்சு.
கொஞ்சம் கேப்பு விட்டாலும் சல்பேட்டா மேங்கோ ஃப்ரூட்டிய ரெண்டு பெக்கு போட்டுட்டு குடும்ப சண்டைய ஆரம்பிக்குறதுக்கான வாய்ப்பு அமோகமா இருந்ததால, பிக்பாஸ் “நான் முந்திக்கிறேன்டா”ன்னு சொல்லிட்டு “கெட் அப் டாஸ்க்குல சுவாரஸ்யமா செஞ்ச ரெண்டு பேர் யாருடா?”ன்னு கேட்டார். சாண்டி & மதுன்னு ரொம்ப ஈசியா சொல்லிட்டானுங்க. “வாரம் முழுக்க எல்லாத்துலயும் நல்லா பண்ணது யாரு?”ன்னு கேட்டதுக்கு முகின சொன்னாங்க. “ஆமா அவரு எப்பவுமே நல்லாதான் பண்ணுவாரு”ன்னு அபியும் அவன் பக்கத்துல உக்காந்து உற்சாகப்படுத்துனாங்க. (வாட்டே கேர்ள்)
“சரி அப்ப ஒழுங்கா செய்யாத ரெண்டு பேரு யாரு?”ன்னு கேக்க, பட்டுன்னு வெடிச்ச பட்டாசு மாதிரி சாண்டி “ஒரு கொரியோகிராபரா சொல்லனும்னா சேரன் ரஜினி மாதிரி இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்”னு ஆரம்பிச்சார்.பெரும்பாலான ஆட்கள் சேரன் பேர சொன்னாங்க.
சல்பேட்டா பயந்துட்டே உக்காந்திருந்த மாதிரி கவின் சல்பேட்டா பேர சொல்லிட்டான் “என்னய கேட்டா சாக்ஷி, லாஸ், ஷெரின் 3 பேருமே (பாரபட்சம் பாக்க மாட்டாப்லயாம்!) கேரக்டர்ல இல்ல”ன்னு கோர்த்து விட்டான். “தோ ஆரம்பிச்சுட்டான் அயோக்யப்பய....நான் வெளிய இருந்தா வம்பிழுப்பேன்னு என்னய ஜெயில்ல தள்ளப் பாக்குறான். இதுக்குத்தான் இருக்குற வரை அவன் கூடயே இருக்கலாம்னு ப்ளான் பண்றேன் ஆனா எல்லாரும் கலைச்சுவிடத்தான் பாக்குறானுங்க. என் கவலை எவனுக்கு புரியுது?”ன்னு ஏக்கப் பெருமூச்சு விட்டு உக்காந்திருந்தாங்க.
சேரன் டென்ஷனாகி முன்னாடி வந்து நின்னு “ஏண்டா சமைக்குற டீம்ல இருந்தா என்னய ‘சக்தி மசாலா மாதிரி சுவை கூட்டுறீங்க!’ன்னு சொல்றீங்க, வெசெல் வாஷிங் போனா ‘விம் பார விட வேகமா கறைகள போக்குறீங்க!’ன்னு கை குடுக்குறீங்க, கக்கூஸ் டீம்ல இருந்தா கக்கூஸ் கழுவுறதுல அப்பாஸுக்கே நாந்தான்னு அப்பான்னு பெருமைபடுத்துறீங்க!’ ஆனா நாமினேஷன்லயும், ஜெயிலுக்கு அனுப்புறதுலயும் மட்டும் என் பேரத்தான் பிள்ளையார் சுழி மாதிரி மொதல்ல எழுதுறீங்க...! வெரி ஒஸ்ட்ரா டேய்...!"
"அதெல்லாம் நான் ஒழுங்காதான் பண்ணேன்! நீங்க சொல்றத நான் ஒத்துக்க மாட்டேன். அப்பிடி சரியா பண்ணலேன்னு சொல்லனும்னா என்னயப் பொறுத்த வரை சரவணன் தான் விஜயகாந்த் மாதிரி ஒழுங்காப் பண்ணலன்னு வார்த்தைகளத் தெறிக்க “ ஆமா இவரு இப்பதான் தர்பார் படத்துல ரஜினிக்கு டூப் போட்டுட்டு வந்தாரு. ரஜினில ‘ர’ அளவுக்குக் கூட இல்ல இதுல என்னய சொல்ல வந்துட்டாரு”ன்னு சரவணன் சொல்ல, பக்கத்துல வந்த தர்ஷன் கிட்ட “அவர என்னன்னு சரியா சொல்லச் சொல்லுயா”ன்னு சொன்னதும் சேரன் “அவன், இவன், வாயா, போயா என்ற ஏக வசனம் வேண்டாம்”னு சொல்ல “நான் அப்பிடித்தாண்டா சொல்லுவேன்னு சொல்லிட்டா நல்லா இருக்காது பாருங்க அதுனால லூசு மாதிரி பேசாம அமைதியா உங்க வேலையப் பாருங்க”ன்னு சொன்னதும் சேரன் ஷாக், ஹவுஸ்மேட்ஸ் ஷாக், நாமளும் ஷாக்!
மறுபடியும் சேரன் சரவணன் கிட்ட “எங்க சொல்லுங்க ம....ரி.....யா...தை”ன்னு ஸ்பெல்லிங் சொல்ல முற்பட, “இப்ப என்ன சொல்ல வர நீ? எந்திரி மொதல”ன்னு நெஞ்ச நிமித்திக்கிட்டு சேரன நோக்கி பாயும் தோட்டா மாதிரி சரவணன் வர “எந்த நேரத்துலயும் தன் முகத்துல சரவணன் 3 புள்ளி கோலம் போடலாம்”ன்ற பீதியில சேரன் உக்காந்திருக்க. கவின் வந்து சரவணன தள்ளிட்டுப் போனான்.
சேரன் வெளிய எந்திருச்சுப் போயிட்டாரு. பெண்கள் எல்லாரும் வந்து சேரன் கிட்ட “அவரு சொன்னது தப்புதான் ஆனா போயான்னு தர்ஷனதான சொன்னாரு”ன்னு சொல்ல, சேரனோ “அப்ப நீங்க எனக்கு ஆறுதலுக்கு வரல எனக்கு காது சரியா கேக்கலேன்னு சொல்ல வந்துருக்கீங்க?”ன்ற மாதிரி பாத்துட்டு “என்னயுந்தான் சொன்னாரு, எல்லாரும் கொஞ்சம் அங்குட்டுப் போங்க என் மகளோட நான் பேசனும்”னு அனுப்பி விட்டார்.
உள்ள சரவணன் “நான் தப்பெல்லாம் பண்ணல அவரா இந்தப் பிரச்சனைய ஆரம்பிச்சு எல்லாரையும் தனித்தனியா இன்ஃப்ளுயன்ஸ் பண்ணப் பாக்குறார் அவர கேளுங்க”ன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்.
வெளிய லாஸ் & சேரன்
சேரன் : லூசுன்னு சொல்லக் கூடாதுல ! என்ன வார்த்தை அது...ப்ச்ச்
லாஸ் : அதான....அது தப்பு !
சேரன் : மரியாதை இல்லாம லூசுன்னு சொல்லக்கூடாதுல
லாஸ் : ஆமா ஆமா, அப்பிடி சொல்லக் கூடாது
சேரன் : எப்பிடி இப்பிடி லூசுன்னெல்லாம் சொல்றாங்க? சோ சேட்!
லாஸ் : (லைட்டா எரிச்சலாகி) அதான நீ என்ன லூசா? இல்ல பாக்கதான் லூசு மாதிரி இருக்கியா? லூசு உன்னய மாதிரியா இருக்கும்? உன்னயெல்லாம் லூசுன்னு சொல்லலாமா? உன்னய லூசுன்னு சொன்னது எனக்கு கஷ்டமா இருக்கு.
சேரன் : (அடிப்பாவி மகளே! அவனாச்சும் ஒரு தடவைதான் என்னயப் பாத்து லூசுன்னான்....நீ கேப் விடாம சொல்றியே....அவனே பரவாயில்ல போல) போதும்....விடு !
அதாகப்பட்டது சரவணன் பிசியான ஹீரோவா இருந்த காலத்துல சேரன் அசிஸ்டெண்ட் டைரக்டர். அதுவே 99ம் வருஷம் சேரன் பிசியான டைரக்டர். அப்ப ஒரு நாள் ரோட்டுல நின்னு சேரன் கிட்ட வாய்ப்பு கேட்டப்ப “உனகென்னப்பா நீ பெரிய ஹீரோ, நீ பெரிய டைரக்டர், நீ பெரிய ப்ரொட்யூசர்”னு காயப்படுத்திட்டாராம் இதுதான் முன்கதைச்சுருக்கம். அந்த புகைச்சல்தான் இப்ப இருமல் வர வைக்குதாம்.
முடிவு எதுவும் எடுக்காததால தர்ஷன் தான் முடிவெடுக்கனும்னு பிக்பாஸ் சொல்ல மனசக் கல்லாக்கிக்கிட்டு லாஸ் & ஷெரின்னு அந்தப் பக்கமா திரும்பி நின்னு சொன்னான்.
சித்தப்பூ வழக்கம் போல கூலாகிட்டார். மது எப்பவும் போடுற ஓவர் ஆக்டிங் மாத்திரைய ஒன்னு போடுறதுக்கு பதிலா மூணா போட்டுக்கிச்சு போல “நீங்களும் சேரனும் சண்ட போட மாட்டோன்னு சத்தியம் பண்ணிக்குடுங்க....நல்ல நாளும் பொழுதுமா ஆசீர்வாதம் வாங்குறதுக்கு நீங்க ரெண்டு பேருந்தான் பெரிய தலக்கட்டு. நீங்களே தலையில கட்டு போடுற அளவுக்கு அடிச்சுக்கிட்டா நாங்க என்ன பண்றது?”ன்னு ஹெவியா பெர்பார்மன்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க. சரவணன் “அத விடு அவ்வளவு அழகான புருஷன விட்டுட்டு நீ எந்த நம்பிக்கையில இங்க வந்த?”ன்னு வம்பிழுத்துக்கிட்டு இருந்தார். “சேரன் கிட்ட மன்னிப்பு கேக்க சொன்னா கேட்ட ஜோருக்கு வெளிய போயிடுவேன்”னு ஒரு ஸ்டேட்மேண்ட் குடுக்கவும் தவறல.
ஷெரினும் லாஸும் ஜெயிலுக்குள்ள போனாங்க. “கம்பி கேப்புல லாஸ், ஷெரின் மண்டைய கழுவிருச்சுனா என்ன பண்றது?”ன்ற பயத்துல சல்பேட்டா லாக் அப் வாசல்லயே கட்டைய சாத்திக்கிச்சு. தூரத்துல சாண்டி கூட உக்கந்திருந்த கவின் ஜெயிலயே பாக்க, சாண்டி “ஊரடங்குனதுக்கப்பறம் ஊள விட்டுக்கிட்டே ஜெயில் பக்கமா போன, மவனே மாவுக்கட்டு போட்டு விட்டுருவேன்”னு எச்சரிக்க, கவின் “கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு....ரெண்டு காதலும் முக்கிட்டுப் போச்சு”ன்னு முடிச்சுட்டான். அப்பறம் முகினோட சேர்ந்து ராப் பாடுனானுங்க.
திடீர்னு அபிய கட்டிக்கிட்டு லாஸ் அழுக, அதப் பாத்த கவின் “சாண்டி என் இதயத்துல இருந்து ரத்தம் கொட்டுது சீக்கிரம் போயி லாஸ் கண்ணீர நிப்பாட்டு”ன்னு பதற, “நீயெல்லாம் திருந்தவே மாட்டன்னு நாஸ்டர்டாம்ஸே எழுதி இருக்காரு....போ நீயே போயி அவ கண்ணீரக் கட்டுப்படுத்து”ன்னு அனுப்பிட்டான். கவின் போயி லாஸுக்கு ஆறுதல் சொல்லி “உலகத்துக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ, நீயும் காயப்படாத, அடுத்தவங்களையும் காயப்படுத்தாத”ன்னு நீதிக்கதைகள் சொல்லிட்டு இருந்தான்.
அப்பறம் கேப்டனுக்கான டாஸ்க். பனிச்சறுக்கு ஸ்லைடுல 3 பேரும் ஒட்டியிருக்குற ஷூவ கால்ல மாட்டிக்கிட்டு ட்ரெயின் மாதிரி ஒரே நேரத்துல நடக்கனும் கடைசியா இருக்குறவன் தான் கேப்டன்னு சொல்ல ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷமே மது மூக்கு உடைபட்டது. பதறிப்போயி சாண்டி வெளியப் போயிட்டாப்ல. கடைசில ஜெயிச்சது முகின். அபிக்கு அப்பிடி ஒரு சந்தோஷம். இனி இந்த வாரம் முகின் தான் எஜமான், அபி எஜமானியம்மா.
உள்ள மதுவுக்கு உதவி பண்ண கவினப் பாத்துட்டு வெளிய ஜெயில் வாசல்ல நின்னுக்கிட்டு சாக்ஷி “ அரே யார் திஸ் இஸ் டாஸ்க்....உள்ள இந்த கவின் பய ஏன் அவளுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கான்? என்னயத் தவிர எல்லாப் பொண்ணுங்களோடயும் பொழங்குறான். என் குட்டி டவுசரக் காணோம்னு 3 நாளா தேடிட்டு இருக்கேன் அதத் தேடி குடுக்கலாம்ல. ஸோ அரகண்ட்...இதயெல்லாம் யாரும் கேக்காதீங்க”ன்னு ஆரம்பிச்சுடுச்சு.
ஜெயிச்ச முகினுக்கு ஃப்ரிட்ஜுல இருந்த ஃப்ரூட்டி பரிசு, எவ்ளோ வேணும்னாலும் எடுத்து யாரு கூட வேணும்னாலும் பகிர்ந்துக்கலாம். முகின் அத மது கூட பகிர்ந்துகிட்டான்.
நின்ன கோலத்துல காட்சி தரும் ஆண்டவர் டே.....டுடே !
Comments
Post a Comment